தலைவர் பிரபாகரனின் உண்ணாவிரத போராட்டம்! பொங்கி எழுந்த இந்தியத் தமிழ் மாணவர்கள்
சிங்களப் பேரினவாதிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆரம்பித்திருந்த உரிமைப் போராட்டத்தை அயல்நாடான இந்தியா எப்படியெல்லாம் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுதிக்கொள்ள முயற்சி செய்தது.
உதவிக்கு எவருமற்ற அநாதைகளாக தவித்த ஈழத்தமிழர்களுக்கு ‘உதவிசெய்கின்றோம் பேர்வழிகள் என்று கூறிக்கொண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை எப்படி தனது பிராந்திய மேலாதிக்க திட்டத்திற்கு பயன்படுத்த முயற்சித்தது என்பது பற்றியும் முதல் அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம்.
தொடர்ந்தும் பார்க்க இருக்கின்றோம். இந்த இடத்தில், 2003ம் வருடம்; யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்| நிகழ்வுகளில், தென்இந்தியாவில் இருந்து வந்து கலந்துகொண்ட சில தமிழ் அறிஞர்கள் ஆற்றியிருந்த உரையின் சில பகுதிகளையும் இணைத்துக்கொள்வது, இந்தத் தொடருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
‘மானுட விடுதலை நோக்கிய திசையில் ஈழத்தமிழர் உரிமைப்போராட்டமும், கலை, இலக்கிய, ஊடகங்களின் வகிபாகமும்| என்ற தொணிப்பொருளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 19ம், 20ம், 21ம்,22ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த தமிழ் கூடலில் கலந்து கொண்ட இந்தியப் பிரமுகர்கள், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியா விளைவித்த சேதங்களின் சுவடுகள் பற்றிய தமது அணுபவங்கள் பலவற்றை தமது உரைகளின் இடைநடுவே குறிப்பிட்டிருந்தார்கள்.
அவற்றில் இரண்டு சம்பவங்களை மட்டும் முதலில் குறிப்பிட்டுவிட்டு பின்னர் இந்த தொடரை தொடருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதை
மானுடத்தின் தமிழ்க் கூடலின் முதலாம் நாள் நிகழ்வின்போது ‘தமிழ் தேசியமும் தமிழ்க் கவிதைகளும்| என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியிருந்த இந்தியாவின் பிரபல கவிஞர் இன்குலாப் (சாகுல் ஹமிட்) ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார்.
1983ம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்கள் மீது பாரிய படுகொலைகளையும், வன்முறைகளையும் இலங்கை அரசாங்கத்தின் ஆசியுடன் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டிருந்த போது, இந்தியாவின் தமிழ் நாட்டில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. தமது உறவுகள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறையை சகிக்காத தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் இவற்றிற்கு எதிராக குரல்கொடுத்திருந்தார்கள்.
தமிழ் நாட்டுத் தலைவர்களும் ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு எதிராக பலமாக குரல்கொடுத்திருந்தார்கள். இந்தியா உடனடியாகத் தனது படைகளை அனுப்பி ஈழத்தமிழரைப் பாதுகாக்கவேண்டும் என்று தமிழ் நாட்டுத் தலைவர்கள் இந்தியாவின் நடுவன் அரசிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.
ஈழத்திலிருந்த தமிழர்களும் ஈழத்தமிழ் தலைவர்களும் கூட, இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று பேரவா கொண்டிருந்த காலம் அது.
அந்தச் சந்தர்ப்பத்தில், தான் எழுதியிருந்த கவிதை ஒன்றைப்பற்றிக் குறிப்பிட்ட இன்குலாப் அவர்கள், ‘இலங்கைத் தமிழர்களை மீட்க இந்தியாவிடம் படை உதவி கேட்கும் தமிழ் நாட்டுத் தலைவர்களின் போக்கை| அக்கவிதையில் அவர் கண்டித்திருந்தாகத் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்தியப்படைகளிடம் உதவி கேட்பதானது, ‘அட்டையிடம் இரத்த தாணம் கேட்பது போன்ற ஒரு செயல்| என்று அவர் தனது கவிதையில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தார்.
பங்காளதேசத்திலும், இந்தியாவில் விடுதலை வேண்டிப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநிலங்களிலும் இந்தியப்படைகள் நிகழ்த்திக் காண்பித்திருந்த அட்டூழியங்களையெல்லாம் இந்தக் கவிதையில் சுட்டிக்காண்பித்திருந்த கவிஞர் இன்குலாப், இப்படியான இரத்தக்கறை படிந்த இந்தியப்படைகளிடம் சென்றா எமது உடன்பிறப்புக்களை மீட்டுத்தரும்படி நாம் கேட்பது என்று குறிப்பிட்டிருந்தார்.
கவிஞர் இன்குலாப் அவர்களின் இந்தக் கவிதை ஈழத்தமிழர்களைப் பொருத்தவரையில் மட்டுமல்ல, எந்தத் தமிழர்களைப் பொருத்தவரையிலும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே அந்தக் காலத்தில் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த அந்தக் காலத்தில், இந்தியா மட்டுமே ஈழத்தமிழர்களின் மீட்பன் என்று அனைத்துத் தமிழர்களுமே நினைத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்தியப்படைகள் வந்தே ஈழத்தை மீட்டுத்தரவேண்டும் என்று ஈழப் போராளிகள் கூட எதிர்பார்த்துக்கொண்டிருந்த 1980களில், கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்ட இந்த கவிதையையும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தையும் எவருமே அப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்.
ஒரு மாபெரும் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள தமிழருக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. இந்த யதார்த்தத்தை உணர்ந்துகொள்வதற்கு அவர்கள் கொடுத்த விலைகளும் மிகமிக அதிகமாக இருந்தன.
இந்தியப்படைகள் ஈழமண்ணில் கால்தடம் பதித்து ஆடியிருந்த கோரதாண்டவத்தில் அகப்பட்டுக்கொண்ட பின்னர்தான், கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதிய கவிதையின் அர்த்தம் ஈழத்தமிழர்களுக்கு புரிந்தது.
திருமாவளவனின் போராட்டம்
இதேபோன்று, ‘மானுடத்தின் தமிழ்க் கூடலின்| இறுதி நாள் நிகழ்வின் போது உரை நிகழ்த்திய, தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இந்தியா தொடர்பாக முன்னர் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுடன் யுத்தம் புரியும் எண்ணம் புலிகளுக்கு முன்னர் ஒருபோதும் இல்லை என்பதையும், ‘புலிகள்-இந்தியா யுத்தம் என்பது இந்தியா வரிந்திழுத்துக்கொண்ட ஒன்று என்பதையும் அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார்.
1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் புலிகளிடம் இருந்த ஆயுதங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் என்பனவற்றை இந்திய காவல்துறையினர் கைப்பற்றியிருந்ததைத் தொடர்ந்து, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தக் காலத்தில் கல்லூரி மாணவனாக இருந்த இரா திருமாவளவன், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை அப்பொழுது மேற்கொண்டதாக தெரிவித்தார்.
“புலிகளின் தலைவர் உடனடியாக தமது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, ஒரு போராளியாக களம் இறங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திருமாவளவன் தலமையிலான இந்தியத் தமிழ் மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தார்கள்.
தலைவர் பிரபாகரன் உண்னாவிரதம் இருந்த இடத்தில் குவிந்த தமிழ்நாட்டு மாணவர்கள், ‘வீரத்தமிழன் பிரபாகரனே, உண்ணாவிரதம் உனக்கு உரியது அல்ல. உடனடியாக இதனைக் கைவிட்டு ஆயுதத்தை தூக்கு என்று கோரிக்கை விடுத்தார்கள்.
பின்னர், இவர்கள் முன்பு உரை நிகழ்த்திய பிரபாகரன், “நாங்கள் ஆயுதம் ஏந்தியது எங்களை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளிடம் இருந்து எமது மக்களை காப்பாற்றவே. இந்தியா எங்கள் நண்பன்.அவர்களுக்கு எதிராக நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டதாக திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் கடந்த 22.10.2002 அன்று ஆற்றிய தனது உரையில் தெரிவித்தார்.
உண்மையிலேயே இந்தியாவை பகைத்துக்கொள்ளும் எண்ணமோ அல்லது, இந்தியா மீது போர்புரியும் எண்ணமோ புலிகளுக்கு என்றுமே இருந்ததில்லை.
தமது மண்ணை மீட்க இந்தியா உதவிசெய்யும் என்ற நம்பிக்கையும், தமக்கு பக்கபலமாக இந்தியா என்றென்றைக்கும்; இருக்கும் என்ற நம்பிக்கையுமே ஆரம்பத்தில் புலிகளிடம் இருந்தது.
ஆனால், இந்தியாவின் உண்மையான எண்ணம் வெளிப்பட்டபோது, இந்தியா புலிகளை உதாசீனம் செய்து தனது சுயரூபத்தை வெளிக்காண்பித்ததன் பின்னர் புலிகளுக்கு இந்தியாவின் இராணுவத்தை எதிர்ப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை.
ஈழத்தமிழ் மக்களின் கனவு நாயகனாக இருந்த இந்தியா எப்படி ஈழத்தமிழர்களுக்கு எதிராக தனது துப்பாக்கி முனைகளை நீட்டியது என்பதையும், இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் தூக்கமாட்டேன் என்று கூறியிருந்த விடுதலைப் புலிகள், கடைசியில் இந்தியாவிற்கு எதிராக யுத்தம் ஒன்றையே கட்டவிழ்த்துவிடும் சந்தர்ப்பம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றியும் இத்தொடரின் இனி வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.