75 ஆண்டுகளாக தமிழரும் சிங்களவர்களும் வெட்டிக் கொண்டோம்! வேதனைப்படும் தேரர்!
வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமது தாயகம்தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.
நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டமே 2ஆவது சுதந்திர போராட்டம் எனவும் அவர் இதன்போது கூறினார்.
வடக்கு, கிழக்கு தமது தாயகம் என தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றனர்.
ஏன் இரு பகுதிகளை மட்டும் தாயகமாக கருத வேண்டும்? முழு நாடும் எமது என கூறுங்கள், அதற்கு நாம் எதிர்ப்பு இல்லை, நாம் அனைவரும் இலங்கையர்கள். யாழ். நாகதீப எமது பகுதி என நாம் உரிமைகோரவில்லையா? அதுபோல தமிழ் மக்களும் முழு இலங்கையும் தமக்கானது என எண்ண வேண்டும்.
இன்று எமது நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன. தேசிய சொத்துகள் விற்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே வாடகைக்காரர்கள்போல் வாழ வேண்டிய நிலை எமக்கு. இந்நிலைமை மாற வேண்டும், இந்நாடு எமது சொத்து, அதற்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வர வேண்டும்.
அப்போதுதான் எமது மரபுரிமைகளைக் காக்கலாம். வளங்களை காப்பதற்கான 2ஆவது சுதந்திர போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஆதரவு வழங்க வேண்டும், ஒன்றிணைய வேண்டும்.
எமது அனைத்து தலைவர்களும் இணைந்துதான் சுதந்திரத்தை பெற்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. தொல்பொருள் என்பது ஒரு இனத்துக்குரியது அல்ல. ஒரு பழமையான ஆலயம் இருந்தால் அதனையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகள் இன்றைய மத்திய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்