வரி கட்டாமல் நழுவிச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்
வரி கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இலவச கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை சிறந்த முறையில் வழங்க வேண்டுமெனில் அவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி தீர்வு
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளுடன் கூடிய வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் 70 சதவீதமான தொகை கடன் வட்டியை செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகக் குறைவாக வரி அறவிடும் நாடுகளில் இலங்கை 08 ஆவது இடத்தில் உள்ளதோடு, ஹைட்டி, சோமாலியா, ஈரான், வெனிசுலா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளே அந்த வரிசையில் உள்ளன.
அதனால் வரி அறவீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என அவர் கூறியுள்ளார்.