நடன ஆசிரியர் நியமனம் - பல இலட்சம் ரூபாய் பண மோசடி - நால்வர் அதிரடி கைது!
நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாய்களை வாங்கி மோசடி செய்த குழுவினர் கல்முனை தலைமையக காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(9) அன்று கல்முனை பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் கணேசன் என்பவர் முறைப்பாடு ஒன்றினை அளித்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில் நடன ஆசிரியர் நியமனம் ஒன்றினை பெறுவதற்கு கடந்த திங்கட்கிழமை(6) அன்று ஒரே நாளில் கட்டங்கட்டமாக முறையே 600,000 120,000 120,000 என 840000 இலட்சம் ரூபாய்களை வங்கி ஊடாக ஒருவருக்கு வைப்பு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நியமனத்தை தனது மகனுக்கு பெற்றுக் கொடுப்பதற்காகவே குறிப்பிட்ட பணத்தொகைகளை தான் வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தியாவில் தனது மகன் நடன பாடத்தில் பட்டத்தை நிறைவு செய்திருந்தநிலையில், இந்த நியமனத்தை பெற முயற்சித்திருந்ததாகவும், கல்வி அமைச்சில் உள்ள ஒரு பதவி நிலை உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளதை பின்னர் அறிந்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிநடத்தலில் கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல்துறை பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற காவல்துறை கன்ஸ்டபிள்களான முஜிசாத் (88490) விஜிதரன்(90954) பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் செவ்வந்தி(13086) குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை காவல்துறை விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய கைது செய்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் 2 பெண்கள் 2 ஆண்கள் காவல்துறையினரால் திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.
விசாரணையின் அடிப்படையில், கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி சிறைச்சாலை ஒன்றில் சிறைவாசம் அனுபவிக்கின்ற நபர் ஒருவரின் தொடர்பின் பின்விளைவாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் உள்ளவரே தம்மை வழிநடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைதான பெண் சந்தேக நபரின் வங்கி கணக்கில் தொடர்ச்சியாக அதிகளவான பணக்கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வந்துள்ளதையும் காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் நடன ஆசிரியர் நியமனத்திற்காக மற்றுமொரு பெண் சந்தேக நபரின் வங்கி கணக்கிலக்கத்திற்கும் ஏனைய சந்தேக நபர்களது வங்கி கணக்கிலக்கத்திற்கும் ஒரே நாளில் எட்டு இலட்சத்து 40 ஆயிரம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மோசடி கல்வி அமைச்சின் உள்ள அதிகாரி ஒருவரது பெயரை குறிப்பிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரும் காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியும் ஏற்கனவே தனது பெயரில் இவ்வாறு மோசடி இடம்பெற்று வருவதாகக் கூறி காவல் நிலையங்களில் முறைப்பாடு வழங்கி இருப்பதாக காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மோசடியில் கைதான அனைத்து சந்தேக நபர்களையும் ஞாயிற்றுக்கிழமை(12) அன்று கல்முனை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 17 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.