”சாதாரண தர பரீட்சை கடமைகளை புறக்கணிப்போம்” ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (25) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே, நிதி அமைச்சின் செயலாளரிடம் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
மார்ச் 11ஆம் திகதி தாம் எழுத்துமூலமாக விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட நேற்று நிதி அமைச்சின் செயலாளரைச் சந்திக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
எழுத்து மூலமாக கோரிக்கை
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சை கடமைகளை செய்யாமல் புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 11 ஆம் திகதி எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அமைச்சிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க அமைப்பு கூறியுள்ளது.
பாரிய தொழிற்சங்க நடவடிக்கை
அதன்படி, நேற்று நிதியமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது அவர் வெளிநாடு செல்லவிருந்ததால், ஒரு வாரத்தில் அவர் திரும்பியவுடன் அமைச்சின் செயலாளருடன் மற்றொரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக்கு தீங்கு விளைவிக்காத வகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தமது தொழிற்சங்கம் கோருவதாகவும் இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிரவும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கமாட்டோம் எனவும் மேலதிக செயலாளருக்கு இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |