தையிட்டி விகாரை போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை - அடித்து கூறும் டக்ளஸ் அணி
தையிட்டி விகாரை விவகாரத்துக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கிடைக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் .
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (02.08.2023) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,
அண்மையில் தையிட்டி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் இவ்விகாரை அமைந்துள்ள காணி தொடர்பாக விகாராதிபதி, படைத்தரப்பு, குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலர் மற்றும் காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
அரசியல் சுயலாபம்
அதனடிப்படையில் விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதைச் சூழவுள்ள காணிகள் தொடர்பில் விகாராதிபதியுடன் ஆராய்ந்தார். அதேபோன்று குறித்த காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இவ்விரு தரப்பினரது கருத்தக்களின் அடிப்படையில் சுமுகமான ஒரு தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துவரும் நேரத்தில் அதற்கு குந்தகம் விழைவிப்பதற்காக ஒரு அரசியல் குழுவின் சிலர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் விகாரையை அண்மித்துள்ள பகுதிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி தமது அரசியல் சுயலாபத்தை தேடிவருகின்றனர்.
உண்மையில் ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து மக்களின் நலன்சார்ந்த உரிமைகளை மீட்பதற்கான பொறிமுறைகளையே கையாளவேண்டும்.
ஆனால் இங்கு பௌர்ணமி அரசியல் நடத்துவதனூடாக மக்களின் காணிகளை மீட்கமுடியாது என தெரிவித்துள்ள ஶ்ரீரங்கேஸ்வரன் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காது இருப்பதே அந்த மக்களுக்கு செய்யும் உபகாரம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.