தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் : மக்கள் போரட்ட முன்னணி திட்டவட்டம்
தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும் அது அகற்றப்பட வேண்டும் எனவும் மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இத தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது “வடக்குகிழக்கு பகுதிகளிலே தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பல்வேறு தடவைகளில் இடம்பெற்றுள்ளன.
சட்டவிரோத விகாரை
நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டுவருகின்றோம் இன்று தையிட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன்,இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தின்படி ஒருவருடைய இடத்திற்கு சென்று,நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டினால் அந்த இடம் அகற்றப்பட்டு அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்படவேண்டும்.
இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது,இந்த சட்டம் குறிப்பிட்டஒரு பிரிவினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு மதத்திற்கு மாத்திரம் உரியதல்ல.
தையிட்டி விகாரை
இந்த சட்டம் பௌத்தபேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்கானது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக உள்ளவர்கள்,அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களிற்கு தேவையானது போல சட்டத்தை வளைத்துக்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடைபெறுகின்றன.
தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்.ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை.
குறிப்பாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில்,இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை ஆனால் ஆளுநர் இடையில் குறுக்கிட்டு,நாங்கள் அவர்களிடம் பேசிவிட்டோம் , அவர்களிற்கு வேறு காணிகளை வழங்குவோம், உரிமையாளர்கள் வேறு காணிகளை பெற்றுக்கொள்ள தயார் என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
கேள்விக்குறிக்கு உள்ளாகும் எதிர்காலம்
இந்த கருத்திற்கு எதிர்ப்பை தெரிவித்த காணி உரிமையாளர்கள் தாங்கள் வேறு காணிகளை பெறதயாரில்லை என தெரிவித்திருந்தனர்.
சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட் நிலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வடக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் ஆதரவை வழங்குவார்? என்ற கேள்வி எமக்குள்ளது.
ஆளுநரின் வீட்டிற்கு சென்று நாளை யாராவது அவரது வளவிற்குள் விகாரையை அமைத்துவிட்டு வேறு காணிகளை வழங்கினால் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம்.
ஏனென்றால் நாளை இந்த விடயத்தை உதாரணம் காட்டி வேறு ஒருவர் எந்த இடத்திலும் காணிகளை அபகரித்து தங்களிற்கு தேவையான காணிகளை கட்டிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்த விடயம் அமைந்துள்ளது.
இந்த அபகரிப்பிற்கும் சட்டவிரோதத்திற்கும் யாராவது ஒருவர் ஆதரவுவழங்குவாராகயிருந்தால்,இந்த நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும். ஏனென்றால் இது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)