இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகின்றது.
இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள உலக கிண்ண தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த ஆசிய கிண்ண தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில், இறுதி ஆட்டம் உட்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் 4 ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதுடன் ஏனைய போட்டிகள் இலங்கையில் இடம்பெறும்.
பாகிஸ்தான் - நேபாளம் மோதல்

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், பங்காளதேஷ் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மாலை 3 மணிக்கு பாகிஸ்தானின் முல்தான் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியின் இறுதி நாள் ஆட்டம் கொழும்பில் செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.