இன அழிப்புப் போரின் சாட்சியாக எழுதப்பட்ட நூல்: கனடாவை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வெளியீடு
ஈழநாதத்தின் அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றிய சுரேன் கார்த்திகேசு(Suren Karthikesu) இன அழிப்புப் போரின் சாட்சியாக எழுதிய “போரின் சாட்சியம்” என்ற நூல் சுவிட்சர்லாந்தில்(Switzerland) வெளியிடப்படவுள்ளது.
கனடாவில் ஏப்ரல் 27 முதலாவதாக வெளியிடப்பட்ட “போரின் சாட்சியம்” இம்மாதம் மே 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் லுட்சேர்ன்(Lucerne) மாநிலத்தில் இரண்டாவதாக வெளியிடப்படவுள்ளது.
சுரேன் கார்த்திகேசு முள்ளிவாய்க்காலில் 2009 மே 17 வரை பயணித்த ஒரு ஊடகவியலாளராவார்.
விமானத் தாக்குதல்கள்
பாதுகாப்பு வலையங்களில் ஆரம்பித்து தொடர் விமானத் தாக்குதல்கள், கொல்லப்பட்ட மக்கள் தொகை, படை முகாம்கள், வரை படங்கள், கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், மக்களைச் சுட்டுகொன்ற தமிழ்த் துணைக் குழுக்களின் ஆதாரம், தொடர் இடப்பெயர்வுகள், தறப்பாள் வாழ்வு, முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அவலங்கள் மற்றும் இறுதி நாட்கள் என 34 தலைப்புகளில் அனைத்தையும் தொடர்ச்சியாக எழுதி இருப்பது மட்டுமில்லாது அதிகளவிலான நிழற்படங்களையும் ஆதாரமாக இணைத்துள்ளார்.
படங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையுடன் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரின் படம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன அழிப்பு
இந்நூலை சுரேன் அவர்களே வடிவமைத்துள்ளதுடன் மாணவர்கள் பார்வையில் கல்விக்குரிய நூலாகவும், ஆய்வாளர்கள் பார்வையில் ஆய்வுகளுக்கு உதவி செய்யக்கூடிய நூலாகவும் மற்றும் வாசகர்கள் பார்வையில் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய நூலாகவும் வடிவமைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் “நடந்த இன அழிப்புப் போருக்குப் பிறகு ஈழநாதம் இருந்து, ஈழநாதம் இன அழிப்புப் போரை ஆவணப்படுத்தியிருந்தால் எவ்வாறு வந்திருக்குமோ அவ்வாறு இந்நூலை வடிவமைத்துள்ளேன் ” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |