கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தோட்டாக்களுடன் வந்த வர்த்தகர் -வெடித்தது புதிய சர்ச்சை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 50 தோட்டாக்களுடன்வந்த வர்த்தகர் ஒருவரை விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தமை தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
வர்த்தகர் தோட்டாக்களுடன் வந்தமை தொடர்பில் காவல்துறைக்கோ அல்லது விமானப்படையினருக்கோ தகவல் வழங்கியிருக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் குறித்த வர்த்தகரின் சாரதியிடம் விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தோட்டாக்களை ஒப்படைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு தோட்டாக்களுடன் வந்த வர்த்தகர்

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி சிங்கப்பூருக்கு வந்த 44 வயதான வர்த்தகர் ஒருவர் 50, 9 மி.மீ ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, சம்பந்தப்பட்ட வர்த்தகர் வெடிமருந்துகளுக்கான உரிமம் தன்னிடம் இருப்பதாகக் காட்டியதை அடுத்து அதிகாரிகள் அவரை விடுவித்து, வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளனர். அவர் எடுத்துச் செல்ல முயன்ற 50 தோட்டாக்கள் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவரது சாரதியிடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை,விமானப்படைக்கு அறிவிக்கவில்லை

அவ்வாறான நிலையில், விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அல்லது விமானப் படை வீரர்களுக்கும், விமான நிறுவனத்துக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த தினத்தில் அங்கிருந்த அதிகாரிகள் காவல்துறைக்கோ அல்லது விமானப்படையினருக்கோ தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிகளுக்கு வழங்கப்படும் உரிமத்திற்கு 10 தோட்டாக்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். ஆனால் குறித்த வர்த்தகரிடம் 50 தோட்டாக்கள் இருப்பது பிரச்சினைக்குரிய நிலைமை என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளக விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இது குறித்து விமானப்படைத் தளபதிக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது உரிய நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்ட வர்த்தகர் என்ன காரணத்திற்காக தோட்டாக்களை எடுத்துச் செல்ல முயன்றார் என்பதை கண்டறிய முடியவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.