மன்னார் மனித புதைகுழி விவகாரம்: தாமதமாகும் காபன் பரிசோதனை
மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித புதைகுழி வழக்கு விசாரணை நேற்று(14) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் நிறைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
மனித புதைகுழி
இது தொடர்பாக சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில், “நிதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பான செயற்பாட்டில் காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் தாமதமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் C14 பரிசோதனைக்காக எலும்பு மாதிரிகள் அனுப்பப்படவிருந்த நிலையில் அதற்கான நிதி வசதி செய்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்தது.
அவர்கள் அதற்கான பதிலை இன்று(15) அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கேட்டுக்கொண்டமைக்கு அமைய இந்த வழக்கு மே13 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
சட்டத்தரணி
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிதி குறித்த கோரிக்கை காணாாமல்போனோர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்டதாகவும் ஆகவே அவர்கள் இந்த பணிகளை மேற்கொள்வதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனையை மேற்கொள்வதற்கான (கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு - C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டவர் என்ற அடிப்படையில் இந்தப் பணியை மேற்கொள்ளத் தான் தயாரென வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |