சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன முடிவை எடுப்பது!
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் குறித்த பேச்சு அரசியலில் அதிகம் இடம்பிடித்து வருகின்றது.
சிறிலங்காவை அடுத்து யார் ஆட்சி புரியப் போகின்றனர் என்பதும் அவர் சிறிலங்காவின் நிலையை எவ்வாறு மேம்படுத்தி நிர்வகிக்கப் போகிறார் என்பதும் ஒரு புறத்தில் இருக்க, தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதும் இங்கே கவனம் கொள்ள வேண்டியதாகும்.
கடந்த காலத்தில் மிகப் பெரும் இனப்படுகொலையை சந்தித்தவர்கள், ஈழத் தமிழர்கள் என்ற வகையிலும், தமிழர் தேச உரிமைக்காக பெரும் தியாகங்களை கொண்ட போராட்டத்தை நடாத்திவர்கள் என்ற வகையிலும் அதிபர் தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு அல்லது நகர்வை முன்வைக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியமானதாகும்.
அத்துடன் இத் தருணத்தில் கடந்த கால வரலாற்றையும் நிகழ்கால நிலையையும் உய்த்தறியவும் வேண்டும்.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல்
பிரித்தானியர்களிடம் இருந்து அன்றைய சிலோன் விடுதலை பெற்ற வேளையில் பிரதமர் ஆட்சிமுறைமை இருந்தது.
1950களுக்குப் பின்னரான சிங்களத் தலைவர்களின் ஆட்சி அணுகுமுறைகளால் ஈழத் தமிழ் மக்கள் தமது தேசம் குறித்து சிந்திக்கத் தொடங்கிய போதும் எழுபதுகளில்தான் தனிநாடு குறித்த முக்கிய போராட்ட நகர்வுகள் முளவைிட்டன எனலாம்.
இதேவேளை எழுபதுகளில்தான் அதிபர் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது. சிறிலங்காவின் முதல் நிறைவேற்று அதிபரான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஈழத் தமிழ் மக்கள்மீது மிகுந்த ஒறுப்பு பேச்சுக்களையும் வெறுப்புக்களையும் அள்ளி எறிந்த நிலையில், தனிநாட்டுக்கான விடுதலைப் போராட்டமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரெழுச்சியும் ஈழத் தமிழர்களின் பாதையை தனித்துவமான வழியில் இட்டுச் சென்றது வரலாறு ஆகும்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எடுக்கும் நிலைப்பாடு என்பது அவர்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் இனப்படுக்கொலைக்கான நீதி போன்றவற்றின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது.
இந்த வகையில் 2015ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழ் இனப்படுகொலையாளியாக கருதப்படும் மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
தனது அதிபர் தேர்தல் தோல்வியின் பின்னர் ஈழ தேச வரைபடத்தில் வசிக்கும் மக்களால்தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரில் இருந்து அளிக்க பேட்டி எல்லோருக்கும் நிச்சயம் நினைவில் இருக்கும்.
அதிபரான சந்திரிக்காவின் முகம்
எழுபதுகளில் இருந்து பல அதிபர் தேர்தல்களை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்தில் இருந்து பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்.
ஒவ்வொரு அதிபர் தேர்தலும் ஈழத் தமிழ் மக்கள்மீது பெரும் தாக்கங்களை செலுத்தியிருக்கிறது. 90களில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் தமிழ் மக்களின் பெரும் ஆதரவு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரும் தமிழ் மக்களுக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார்.
என்றபோதும் அதிபர் பதவிக்கு வந்த பின்னர் வழக்கமான சிங்களப் பேரினவாத அதிபராக செயற்படத் துவங்கினார். ஈழத் தமிழ் மக்களின் நியாயமும் அறமும் மிக்க விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும் தமிழர் தேசம் மீது இனவழிப்புப் போரை மேற்கொள்ளவும் சந்திரிக்கா அம்மையார் ஈழ மண்ணில் பெரும் அவலகத்தை உண்டுபண்ணினார்.
இடப்பெயர்வுகள், மக்கள் படுகொலைகள், பசி, பஞ்சம் என்று ஈழ மண் உக்கிரமான போரை இவரால் எதிர்கொண்டதும் ஈழவரலாற்றில் மறக்க முடியாத வடு. இதேபோல கடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியிருந்தது.
இந்த நிலையில் தமிழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெல்லுவதற்காக போரில் தான் பெற்ற வெற்றியை அதிகமாகப் பயன்படுத்தியிருந்ததுடன் விடுதலைப் புலிகளை அழித்து போரின் வெற்றியைப் பெற்றது தாமே என்றும் அதிகமாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ஈழத் தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தார்கள். வடக்கு கிழக்கு – தமிழர் தேச மக்கள் கோத்தபாயவுக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு தமது வாக்குகளை அளித்திருந்தார்கள்.
அத் தேர்தலில் சஜித் பிரேமதாச தோற்றிருந்தாலும், தமது வாக்குகளை கோத்தபாய ராஜபக்சவுக்கு அளிக்காமல் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய செய்தி முக்கியமானது.
அதிபர் தேர்தலில் வெளிப்பட்ட செய்தி
இப்படியாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தமிழர் தேசத்தின் செய்திகளை வெளிப்படுத்தும் நகர்வுகளாகவே அமைகின்றது.
2010 அதிபர் தேர்தலில்கூட மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகாவுக்கு இடையிலான தேர்தல் போட்டியிலும் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுகளை தமிழ் கட்சிகள் எடுத்தவேளையில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்கினை அளித்திருந்தனர்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு தரப்பு உடைந்து இவ்வாறு போட்டிக் களத்தை உருவாக்கிய வேளையில் அதில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான குரலை வெளிப்படுத்தும் களமாக அத் தேர்தல் களம் அன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.
அதிபர் தேர்தல்களில் வெல்லுகின்ற அதிபர்கள் சிங்கள மக்களுக்கான அதிபர்களாகவே இருப்பதும் கடந்த காலத்தில் நாம் கண்டு வந்த உண்மைகளாகும். இதன் காரணமாகவே வடக்கு கிழக்கு தமிழர் தேசம் எப்போதும் அடக்கப்படுகிறது. ஒடுக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கு தனித் தேசமாகவே சிந்திக்கின்றது.
கடந்த காலத்தில் கோத்தபாய ராஜபக்ச அதிபராக வெற்றி பெற்றவுடன் சிங்கள மக்களின் வாக்குகளில் அதிபர் ஆனவர் என்று தன்னை அடையாளப்படுத்தினார். ஆனால் அதே மக்களால் பிற்காலத்தில் அவர் தூக்கி எறியப்பட்டிருந்தார்.
அதிபர் தேர்தலையும் கூட ஒரு போராட்டமாகவும் செய்தியை வெளிப்படுத்தும் களமாகவும் ஈழ மக்கள் கையாண்டு வருகின்றனர்.
யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது?
சிலவேளைகளில் நாம் எடுத்துள்ள முடிவுகள் நம்மை இன்னமும் பின்னுக்கு தள்ளியே உள்ளன.
கடந்த 2015இல் நடந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈழத் தமிழர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இருந்தனர். ராஜபக்சக்களிடமிருந்து பிரிந்து வந்து, அவருக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்காலத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க, இனப்படுகொலைக் குற்றங்களில் இருந்து சர்வதேச அரங்கில் ராஜபக்சக்களை காப்பாற்றியிருந்தார்கள்.
[RUP43ஸ
இதனால் ஈழத் தமிழ் மக்களின் விவகாரம் பன்னாட்டு அரங்கில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இத்தகைய அனுபவங்களையும் நாம் நினைவில் கொள்வது அவசியமானது. இம்முறை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது? அல்லது அதிபர் தேர்தலை புறக்கணிப்பதா? அல்லது தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா? என்பது போன்ற உரையாடல்கள் துவங்கியுள்ளன.
கடந்த காலத்தில் கசப்புக்கள், ஏமாற்றங்கள், துரோகங்களை சந்திருக்கும் நாம், இம்முறை எத்தகைய முடிவை எடுக்கப் போகிறோம்? இதனால் ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கும் இறைமைக்கும் விடுதலைக்குமான போராட்டப் பயணத்தில் என்ன நன்மையும் வெற்றியும் விளையப்போகிறது? மாபெரும் இனவழிப்பை தொடர்ந்து எதிர்கொள்ளும் நாம் அதிலிருந்து மீள ஏதேனும் வழி பிறக்குமா? இப்படியான நிறையக் கேள்விகளுடன் இருக்கிறது வடக்கு கிழக்கு தேசம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 31 March, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.