கோயிலில் மதம் பிடித்து வெறியாட்டம் ஆடிய யானை..! எதிரெதிரே மோதிக்கொள்ளும் யானைகளின் பதைபதைக்கும் காட்சிகள்
கேரளாவில், கோவில் திருவிழாவில் மதம் பிடித்த யானை மற்றொரு யானையுடன் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி நடுங்க வைத்துள்ளன.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆராட்டுப்புழா ஆலயத்தில் பூரம் உற்சவ விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இறுதி நாளான வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி அளவில், ‘உபசாரம் சொல்லல்’ என்ற ஒரு சடங்கு நடைபெற்றது. சடங்கின் முக்கிய நிகழ்வாக பகவானின் திடம்பு, யானை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
எதிரெதிரே மோதிய யானைகள்
நிகழ்ச்சி தொடங்கி பக்தர்கள் கூட்டம் அலைமோத மேள தாளங்கள் முழங்கக் களைக்கட்டிய திருவிழாவில், குருவாயூரைச் சேர்ந்த ரவிகிருஷ்ணன் என்ற யானையின் மீது திடம்பு ஏற்றப்பட்டது. பாகன் ஸ்ரீகுமார், யானையை வழி நடத்திச் சென்றார்.
ரவிகிருஷ்ணன் யானையின் அருகில் புதுப்பள்ளி அர்ஜுனன் என்ற வேறொரு யானையும் உடன் வந்தது.
திடீரென்று குருவாயூர் ரவி கிருஷ்ணன் யானை மிரண்டது. தறி கெட்டு அங்கும் இங்கும் ஓட தொடங்கியது. வெகு வேகமாக ஓடிய ரவிசங்கர் யானை தனக்கு எதிரே திரும்பி நின்ற அர்ஜுனன் என்ற யானையின் மீது மோதியது. பதிலுக்கு அர்ஜூனன் யானையும் மல்லுக்கட்டியது.
கேரளாவில் பெரும் பரபரப்பு
இதில் அர்ஜுனன் யானை மீது இருந்த அமர்ந்தவர்கள் வெஞ்சாமரத்துடன் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சிலர் ஓடும்போது தடுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினரும் மற்றும் வனத்துறையினரும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கோவில் திருவிழாவில் முரண்டு பிடித்த யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#கேரள மாநிலம் ஆராட்டுபுழாவில் கோயில் திருவிழாவில் இரண்டு யானைகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு #Kerala #elephant #Fights pic.twitter.com/c02QvNGAi6
— ᖭ𝔭𝔡〲Pradiv》 (@its_pradiv_) March 23, 2024