ஐ.நாவும் ஈழத்தமிழர்களும்
இலங்கையில் தமிழருக்கு உரிமை வேண்டி நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 16 வருடங்கள் கடந்தோடிவிட்டன.
இந்த இன அழிப்பு போரில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டதும் இராணுவத்திடம் தமது உறவுகளை கொடுத்தும் அவர்கள் பின்பு காணாமல் போன நிலையில் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டு வீதியில் வருடக்கணக்காக போராடும் உறவுகள்.
இந்த நிலையிலேயே வருடந்தோறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடுகிறது.இந்தக்கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரேயே இலங்கையில் தமிழர் தரப்பில் ஆரவாரம் அதிகமாகி விடும் என்றார் ஒருவர்.
ஏன் என்று கேட்டேன். இல்லை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழமக்களை கொன்றொழித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற மனநிலை அவர்களுக்கு என்றார் அவர்.
இந்தா பாருங்கள் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூட்டத்தொடர் வருவதற்கு முன்னர் வருகை தந்தார்.இவ்வாறு வந்தவர் தமிழர்களின் ஆன்மா அலறும் செம்மணிக்கும் வந்தார். ஊடகங்களும் அவரது வருகைக்கு பெரிய விம்பத்தை கொடுத்தது. ஆனால் என்ன நடந்தது என்று கேட்கிறார் அவர்.
அத்துடன் இன்னுமொரு விடயத்தையும் அவர் சொன்னார் அதுதான் ஆக அதிர்ச்சியாகவும் இருந்தது. அதாவது சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோரி வரும் நிலையில் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டிலேயே பொறுப்புக்கூறலுக்கான தீர்வை எட்டமுடியும் என்று தெரிவித்து வருகிறது. ஆக சிறிலங்கா அரசின் நிலைப்பாடோடு கிட்டத்தட்ட ஐ.நாவும் இறங்கி வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அப்படியென்றால் தமிழரின் இதுநாள்வரையான கோரிக்கை என்றேன்…
அதற்கு அடுத்ததாக அவர் சொன்ன செய்திதான் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அங்கிருந்து வெளியேறுமாறு ஐ.நாவிற்கு மகிந்த அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் வெளியேற தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வன்னியில் உள்ள தமிழ் மக்கள் தமக்கு பாதுகாப்பில்லை. நாதியற்ற தம்மை விட்டு விட்டு போக வேண்டாம் என கோரி ஐ.நா அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்த மக்களின் அழு குரல்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறிய ஐ.நாவா தமிழ் மக்களுக்கு தீர்வை மேசையில் தரப்போகிறது என்று கேட்டார் அவர்.
அத்துடன் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் யுத்தம் முடிந்த கையோடு வன்னிக்கும் வந்தார் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கான தீர்வு 13 பிளஸ் என்றார்.
தற்போது 13 பிளஸ் எங்கே மகிந்த எங்கே என அவர் ஒரு போடு போட்டார்.
இறுதியாக வடிவேலு பாணியில் எத்தனை காலத்திற்குதான் தமிழ் மக்கள் ஐ.நா வை நம்பிக்கொண்டிருக்கப்போகிறார்களோ….? என்று அவர் கேட்டதும் சரிபோலவே படுகிறது
