நாட்டை ஆள ராஜபக்சாக்கள் மாத்திரமா உள்ளனர்? முட்டாளாக்க வேண்டாமென தெரிவிப்பு
பஸில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தற்போது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.நாட்டை நிர்வகிப்பதற்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமா உள்ளனர்? எம்மை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அவ்வாறு தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,
பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் என்று தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகள் தீரும் என்று கூறினர். அவரது ஆட்சிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவைக் கூறினர். இவ்வாறு ராஜபக்ஷ குடும்பத்திலுள்ளவர்களையே வெளிக்கொண்டு வருகின்றனர். ஒருவர் தோல்வியடையும்போது மற்றைய ஒருவரை களத்தில் இறக்குகின்றனர்.
அவ்வாறெனில் நாட்டை நிர்வகிப்பதற்கு ராஜபக்ஷக்கள் மாத்திரமா உள்ளனர்? பசில் ராஜபக்ஷ என்ற தனியொரு நபரால் நாட்டில் தற்போது காணப்படுகின்ற சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்க முடியுமா?
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக உள்ள அவர் நாட்டில் இருக்கும்போது இந்த பிரச்சினைகள் எவையும் காணப்படவில்லையா? இது கொள்கை ரீதியான பிரச்சினையாகும். இவை அரசாங்கத்திலுள்ள சகலரதும் பொறுப்பாகும். எனவே ஒரு நபரின் வருகையால் இவை அனைத்தும் மாற்றமடையும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
அவ்வாறெனில் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோதே ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் அல்லவா? பசில் நாடு திரும்பியதன் பின்னர் எரிபொருள் விலை குறைவடையும் என்று கூறுபவர்கள் எம்மை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அவ்வாறு தெரிவிக்கின்றனர். அமைச்சு பதவிகூட இல்லாத அவரால் எவ்வாறு அதனை செய்ய முடியும்?
எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியுடனேயே தீர்மானிக்கப்படும். அதற்கான முறையான படிமுறைகள் உள்ளன. அவ்வாறெனில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அப்பால் பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இது தர்க்க ரீதியான விடயமல்ல. அரசாங்கம் சிதைவடைந்துள்ளதால் மக்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான நிலைப்பாடுகளை தோற்றுவிக்கின்றனர்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமெனில் அந்த கட்சியில் பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதனடிப்படையில் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்படக்கூடும். ஆனால் நாட்டுக்கு தற்போது அவசியமாகவுள்ளது நபர்கள் அல்ல. சிறந்த வேலைத்திட்டமேயாகும் என்றார்.