13 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் - மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை பெறுமாறு வலியுறுத்தல்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டுமென சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் கோரியுள்ளார்.
இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்களுடனும் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான பேச்சுக்களை நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நீண்ட கால பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்கள் முற்றாக நிராகரிப்பு
இந் நிலையில், குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது எனும் நிலைப்பாட்டில் மகாநாயக்க தேரர்கள் இருப்பதாக தம்மானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பல பாதகமான விளைவுகளை நாடு எதிர்நோக்க நேரிடுமெனவும் முன்னாள் அதிபர்கள் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்காமையின் பின்னணியில் நியாயமான காரணங்கள் இருக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நடைமுறையை தாம் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள் முற்றாக எதிர்ப்பதாக மெதகம தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 13 ஆவது திருத்த சட்டத்தின் நடைமுறை குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை முன்னெடுத்திருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்த அவருக்கு உரிமை இல்லை என்று தெரிவித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.