நல்லூரில் குவிந்த மக்கள் : உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்திற்கு அஞ்சலி
புதிய இணைப்பு
நினைவூர்திப் பவனி நல்லூரை வந்தடைந்த நிலையில் அங்குள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டுள்ளதுடன் திலீபனை நினைவுகூரும் முகமாக நினைவாலயத்தை நோக்கி காவடி எடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திலீபனின் இல்லத்திலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான நினைவூர்திப் பவனி!
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான12 ஆம் நாள் இன்றாகும்.
அந்த வகையில் இன்று காலை திலீபனின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் - ஊரெழுவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நினைவூர்திப் பவனி பேரெழுச்சியுடன் புறப்பட்டு நல்லூர் நினைவாலயம் நோக்கி நகர்கின்றது.

ஊரெழு மண்ணில் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் மக்கள் தங்களது இறுதிக்கட்ட நினைவேந்தலைச் செலுத்தி வருகின்றனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரெழுவில் இருந்து புறப்பட்ட நினைவூர்திப் பவனி நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயத்தை வந்தடைந்து அங்கு தியாக தீபம் இவ்வுலகை விட்டு பிரிந்த நேரமான காலை 10:48 மணிக்கு முதன்மை ஈகைச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |