மாவீரர் தினம் : தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் : யாழ் மாநகர சபையில் கடும் அமளி
மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய (5) மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும் ஏற்படுத்தியுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (05.11.2026) மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.
மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரம்
இதன்போதே மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூர் ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

குறித்த காணியை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி வழங்குவது தொடர்பாக விவாதம் முன்னெடுக்கப்பட்டபோது,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
குறித்த காணியை குத்தகைக்கு வழங்கும்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களையும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் எவ்விதமான சர்ச்சைகளும் ஏற்படாத வகையில் இறுக்கமான நிபந்தனைகளை உள்ளடக்கி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
முதலில் சட்ட ஆலோசனை
இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் கபிலன், குறித்த காணியை வழங்குவது தொடர்பில் முதலில் சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயத்தில் தமது கட்சியின் நிலைப்பாடு சட்ட ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதைச் சபையில் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, எந்தவொரு அமைப்பினரின் நினைவேந்தலாக இருந்தாலும் அதனை நினைவுகூரும் உரிமையைத் தமது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்தை அடுத்து குறித்த விடையம் பெரும் விவாதப் பொருளாக மாறியதுடன், காணியை வழங்குவது தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடுகளும் மீண்டும் கேள்விக்குள்ளாகின.
காரசாரமான வாக்குவாதம்
இதற்கிடையில், மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் குறித்த காணியை வழங்குவது தொடர்பான விவாதம் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான கருத்து மோதலாக மாறியது.

இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்த நிலையில், விவாதம் காரசாரமான வாக்குவாதமாக உருவெடுத்தது. இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்களும் கூச்சல் குழப்பங்களும் இடம்பெற்று அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
இதேவேளை,மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பான விவாதங்களுடன் சிலை விவகாரமும் இணைந்து சபையில் அரசியல் ரீதியான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருந்தது.
மக்களின் உணர்வுகள், நினைவேந்தல் உரிமை, சட்ட நடைமுறைகள் மற்றும் மாநகர சபையின் நிர்வாகப் பொறுப்புகள் எனப் பல்வேறு விடயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிலையில், இன்றைய அமர்வு பெரும் அமளிதுமளியை உருவாக்கியது.
குறிப்பாக மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான காணி குத்தகை விவகாரத்தில் ஆரம்பித்த விவாதம், கட்சிகளுக்கிடையிலான அரசியல் முரண்பாடுகளாக விரிவடைந்து, யாழ் மாநகர சபையின் இன்றைய அமர்வையே பெரும் அமளியில் முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |