தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம் : நல்லூரில் இரவு பகலாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையை காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு எதிராக அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
திலீபனுடைய சிலையை நினைவிடத்தில் மீள வைக்கக் கோரி திலீபன் நினைவாலயத்தின் முன்பு நேற்று (30) மாலை 5 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் இரவு பகலாக நாளை மாலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, நேற்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்ட பொதுச் சுடரை தொடர்ச்சியாக எரிய விடப்பட்டு திலீபனின் சிலைக்கான நீதியைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்
யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தொடர் போராட்டத்தில், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய சங்கங்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |