திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா: அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மகா சிவராத்திரி பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் இன்று (27.01.2026) நடைபெற்றது.
அதன்படி, இன்று (27.01.2026) காலை 9.30 க்கு மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் . க. கனகேஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மகா சிவராத்திரி பெருவிழா ஒழுங்குமுறையுடனும் பாதுகாப்பாகவும் பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையிலும் நடத்தப்படுவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திட்டங்கள்
இதன்போது போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் வீதி ஒழுங்குபடுத்தல் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்களின் ஊடாக போக்குவரத்து மேலாண்மை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு பணிகள் மின்சார விநியோகம் நீர் விநியோகம் , உணவு வழங்கல் , பாதுகாப்பு விடயங்கள், சாரணியர் சேவை, செஞ்சிலுவை சேவை, சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ், முதலுதவி படை, மருத்துவ அவசர ஊர்தி சேவைகள் ஆகியவை தொடர்பாக தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் பிரதேச செயலகம், மன்னார் இணைப்புஅலுவலகம் அமைத்தல், தற்காலிக கொட்டகைகள் அமைத்தல், வர்த்தக நிலையங்கள் ஒழுங்குபடுத்தல், வாகனத் தரிப்பிடங்கள் ஏற்பாடு, ஊடக நடவடிக்கைகள், தீயணைப்பு சேவை, களப்பயண திகதி நிர்ணயம், விலை கட்டுப்பாடு, உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

