முன்னேற்றத்திற்கு இதுவே வழி - இலங்கையர்களுக்கு ஆலோசனை
இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் வரையில் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22), வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இந்த அரசாங்கத்தில் நல்ல வேலைத்திட்டங்கள் எடுத்ததை போன்று தவறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உரப் பிரச்சினை என்பன தவறான தீர்மானம், ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொடுத்த வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்.
தவறுகள் விடப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும். அதனை செய்ய முயற்சிக்கும் வேளையில் அதனையும் தடுப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
நாட்டில் பல்வேறு மாறுபட்ட ஆட்சியை உருவாக்கியும் அவற்றில் முழுமையாக வெற்றி கிடைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தில் நாட்டுக்கு ஏற்ற சிறந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்த்தோம். இன முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது வெற்றிபெறவில்லை.
இந்த நாட்டில் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், தொலைபேசி சின்னக்காரர்கள், காவியுடையினர் என சிந்திக்காது இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் வரையில் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது.
எனவே சகல தரப்பினரும் இப்போது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.