தமிழ் மண்ணில் அரங்கேறிய ஆயிரமாயிரம் பட்டலந்த சம்பவங்கள் : புட்டு வைக்கும் சிவஞானம்
பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணிலுக்கு தொடர்பு
இப்போது பலரும் பேசி வருகின்ற பட்டலந்த விவகாரம் அந்தக் காலத்திலேயே மிகப் பெரியளவில் பேசப்பட்டது. அதாவது முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)இளமைக் காலத்திலே அதற்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாகவே பேசப்பட்டும் வந்தது. அந்த ஆணைக்குழு அறிக்கைகூட இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும் இதனை உறுதிப்படுத்தியும் இருக்கிறது.
ஆனபடியால் அவர்களைப் பொறுத்தவரையில் இது காலங்கடந்தது என்றாலும் அதனைப் பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரி என்றே நான் நினைக்கிறேன்.
உண்மையை சொல்ல போனால் இந்த பட்டலந்த படுகொலை விவகாரம் என்பது அந்த நாட்டிலே இருக்கிற அந்த மக்களுக்காக அங்கே செய்கிற விடயம். ஆனால் ஆட்சியில் இருக்கிற எந்த அரசாங்கமும் தமிழர்களுக்கு என்ன செய்தாலும் அது சரி என்று நியாயப்படுத்துற வேலையை தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிற அரசாங்கங்கள் செய்து கொண்டு வந்திருக்கிறது.
அது தான் இவர்களது பொலிசியாகவும் அதாவது அவர்களது நிலைப்பாடாகவும் இருக்கிறது. ஏனெனில் காட்சிகள் மாறுகிறதே ஒழிய ஆட்கள் மாறவில்லலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாது.
இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும்
இந்த பட்டலந்த விவகாரம் சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் ஏதும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அது அவர்களே சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படி தான் இப்போது நடக்கிறது. இதனைப்பற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக் கொள்ளட்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவரும் சேர்ந்து இவரும் சேர்ந்து என அவர்கள் எல்லோருமாக இப்படி எத்தனை பட்டலந்தவை எமது மண்ணிலே நடத்தியிருக்கிறார்கள்.
ஒரு பட்டலந்த பற்றி இப்போது அங்கு அவர்கள் பேசுகின்றார்கள். ஆனால் இப்படி எத்தனை ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றன. இங்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள் அவை எல்லாவற்றுக்கும் விசாரணை நடக்கப் போகிறதா என்றால் இல்லை.
ஆக பட்டலந்த போல பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளதற்கு நீங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறீர்கள் என்றும் உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பல்வேறு கேள்வியை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம் என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்