பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம்
அம்பேவெல பிரதேசத்தில் அரச காணியை வழங்காததற்கு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்கவின்(Niluka Ekanayake) கணவர் நேற்று (01) காலை நுவரெலியா காவல்துறை தலைமையகத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
நிலுகா ஏகநாயக்க மத்திய மாகாண ஆளுநராக இருந்த காலத்தில், அவரும் அவரது கணவரும் நுவரெலியாவில்(nuwara eliya) உள்ள கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச காணியைப் பயன்படுத்தினர், பின்னர் அந்த நிலத்தை நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளனர்.
காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக உரிமை இல்லை
அந்த காணிக்குப் பதிலாக, நுவரெலியா அம்பேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியை அபிவிருத்திக்காக வழங்குமாறு முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளர் டி.ஏ.பி. தனசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக தமக்கு உரிமை இல்லை என பிரதேச செயலாளர், முன்னாள் ஆளுநரின் கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னர் குறித்த காணியை வழங்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்வோம் என அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பிரதேச செயலாளர் நுவரெலியா தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவரை மன்னிக்குமாறு கேட்ட முன்னாள் ஆளுநர்
இதேவேளை, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு அளிக்குமாறும் தனது கணவரை மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கத் தயார் என அவரது கணவரும் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்படி முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா காவல்நிலையத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
இனிமேலும் இவ்வாறு மிரட்டமாட்டேன் என காவல்துறை புத்தகத்தில் எழுதிவிட்டு பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை விடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (30) காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |