காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழ்ப்பாணத்தில் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டவர் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி இன்றையதினம் யாழ்ப்பாணம் -ஐந்து சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் போதை மாத்திரைகளின் பெறுமதி 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் கைது
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(09) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி காவல்துறையினர் விரைந்தனர்.

இதன்போது இரு டிப்பர் வாகனங்கள், இரு உழவு இயந்திரங்கள், மண் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இருவரை கைது செய்தனர்.
கைதானவர்களையும், சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
செய்திகள் - தீபன்,கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





