றீச்சாவில் மூன்று நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா : வெளியான அறிவிப்பு
வடக்கு கிழக்கின் முக்கிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை “றீச்சா உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழாவை நடத்துவதற்கு தயாராகியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் முகாமைத்துவ குழுவினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
றீச்சா உணவுத் திருவிழா 2026 இல் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்து மகிழ வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
உணவுத் திருவிழாவின் பிரதான வரையறையற்ற உணவு சேவை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். ஒரே டிக்கெட்டினால் பார்வையாளர்கள் இச்சிறப்பான உணவு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00 மணிமுதல் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் வருகை தர முடியும்.
பகல் நேரத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அனுபவிக்க முடியும். விளையாட்டுகளில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான விளையாட்டு டிக்கெட்டுகளை தனியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்மூலம், உணவு திருவிழா டிக்கெட் பெற்றவர்கள் காலைமுதல் இரவு வரை றீச்சா வளாகத்தில் முழுமையான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
எனவே, ஏற்பாட்டாளர்கள், உணவுத் திருவிழா டிக்கெட் இல்லாத ஏனைய பார்வையாளர்கள் மேற்குறிப்பிட்ட 3 நாட்களிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
றீச்சா பண்ணை வளாகத்தின் பாதுகாப்பு
பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஒழுங்கான நிகழ்வு நிர்வாகத்தையும் உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 1,500 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, 3 நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே உணவுத் திருவிழாவில் பங்கேற்க முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தியடைந்த பின்னர் மேலதிக டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது.

'றீச்சா உணவுத் திருவிழா 2026'க்கான அனைத்து டிக்கெட்டுகளும் இணைய வழி மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆர்வமுள்ள பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
டிக்கெட் வாங்கிய பின்னர் நிகழ்வில் கலந்துகொள்ளாதது அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வருகை தரமுடியாதது போன்ற சந்தர்ப்பங்களில் டிக்கெட் தொகை திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.
எனவே, டிக்கெட் வாங்குவதற்கு முன் நிகழ்வின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து, அவற்றை புரிந்துகொண்டு டிக்கெட் கொள்வனவு செய்யுங்கள்.
விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பார்வையாளர்களும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |