சுமந்திரனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட நிலை : மாவை தெரிவித்த தகவல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக மத்திய செயற்குழுவில் கலந்துரையாடப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியிருந்த போதிலும் அது தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுவதை இன்று அவர் தவிர்த்துக்கொண்டார்.
மாறாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு மற்றும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்தே இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்ட போதிலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர் தவிர்த்துக்கொண்டுள்ளார்.
இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின் உண்மைத் தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மாறான கருத்து
எம்.ஏ.சுமந்திரனின் கருத்து குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த 29 ஆம் திகதி மாவை சேனாதிராஜா ஐ.பி.சி தமிழுக்கு கூறியிருந்த நிலையில், அதற்கு மாறான கருத்தை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற எம்.ஏ.சுமந்திரனின் கருத்து தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தாம் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது மன வருத்தம் அளிப்பதாக இரா.சம்பந்தன் கூறியதாக மாவை சேனாதிராஜா தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்து குறித்து தம்மை நேரில் சந்திக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பில் வைத்து இரா.சம்பந்தனை தாம் சந்தித்ததாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
இது குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு, தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.