தொடரும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
புதிய இணைப்பு
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |