வவுனியாவில் தொடரும் கனமழை: வெள்ள நீரால் போக்குவரத்து தடை
வவுனியாவில்(Vavuniya) பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பல நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் என்பன நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன், காமினி மாக வித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை
இதேவேளை, வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.
இந்நிலையில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகரசபைச் செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |