புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதியில் விபத்து! குடும்பஸ்தர் பலி
புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு (14) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதியில் காளிகோவிலடியை அண்மித்த பகுதியில் - பாலம் திருத்தப்பணிகள் நடைபெற்றுவருகிறது.
இதனால் மக்களின் போக்குவரத்திற்காக மாற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரவு 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வேகமாக சென்ற உந்துருளி திருத்தப்பணிகள் மேற்கொண்டுவரும் பாலத்திற்குள் எச்சரிக்கை சமிஞ்சையினை தாண்டி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த திருகோணமலை திரியாய் 06 ஆம் வட்டாரம் கட்டுக்குளத்தினை பிறப்பிடமாகவும் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டினை வசிப்பிடமாக கொண்ட 37 அகவையுடைய 03 பிள்ளைகளின் தந்தையான அழகானந்தான் காந்தன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.