வெள்ள நீரில் மூழ்கிய உப்பளங்கள்: உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
புத்தளம் உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான உப்பு, பலத்த மழை காரணமாக அழிந்துவிட்டதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனிஸ் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சொந்தமான உப்பளங்களில் மாத்திரம் பத்தாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான உப்பு, தண்ணீர் புகுந்ததால் நாசமானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேதம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், புத்தளம், வனாத்தவில்லுவ, முந்தலம் மற்றும் கற்பிட்டி பகுதிகளில் உள்ள தனியார் உப்பு உற்பத்தியாளர்களின் அறுவடையில் இருந்து பத்தாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான உப்பு தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

மேலும், புத்தளம் உப்பு நிறுவனம் மற்றும் பிற பாரிய அளவிலான வர்த்தகர்களால் சேமித்து வைக்கப்பட்ட 5,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான உப்பு நாசமாகியுள்ளது.
அதன்படி, புத்தளம் உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 120 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொழில் கடுமையாக சேதமடைந்துள்ளது. ” என தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதால் இதற்காக, அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |