ரிஷி சுனக்கை பதவியிலிருந்து விலக்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் எம் .பி க்கள் !
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு புதிய பிரதமராக ஒரு பெண்ணை நியமிக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பலம்பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பென்னி மோர்டவுன்ட்(Penny Mordaunt) என்பவரையே நாட்டின் பிரதமராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதன் மூலமாக பல ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியர்கள் நான்காவது கன்சர்வேடிவ் கட்சி பிரதமரைப் பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மிக விரைவிலேயே கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கான தேர்தலையும் முன்னெடுக்கும் திட்டத்தை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் குழு வகுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, அடுத்த கட்சி தலைவர் மற்றும் பிரதமரை மிக விரைவில் அறிவிக்கவும் அவர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தலைவர் தெரிவு
மேலும், மே மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலைப் பொறுத்தே ரிஷி சுனக்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் நெருக்கடியில், ரிஷி சுனக் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் மொத்த கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மிக விரைவில் தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்தை முன்னெடுக்க உள்ளது மாத்திரமன்றி, கட்சியில் தற்போது பென்னி மோர்டவுன்டுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது.
இரகசிய கூட்டம்
மேலும் 53 கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிஷி சுனக்குக்கு எதிராக நம்பிக்கை இல்லா கடிதம் அளித்தால், பிரதமர் பொறுப்பில் இருந்து கட்டாயம் ரிஷி சுனக் விலக நேரும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இந்த இரகசிய கூட்டம் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பில் பென்னி தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |