இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 930,794 ஆக அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது சமீபத்திய புள்ளிவிபரங்களில் தெரிவித்துள்ளது.
குளிர்காலம் முடிவடைந்த நிலையில், மேற்கத்திய நாடுகளிலிருந்து ஆசிய பிராந்தியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு தினமும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 5,000க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், மே 1 முதல் மே 7 வரையிலான வாரத்தை ஆய்வு செய்தபோது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இதே வாரத்தை விட 2025 ஆம் ஆண்டில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.
மொத்த சுற்றுலா வருமானம்
2023ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 18,761 ஆகவும், 2024 ஆம் ஆண்டில், இது 28,526 ஆகவும் பதிவாகியுள்ளது. 2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33,910 ஆகும்.
இதற்கிடையில், 2025 ஜனவரி - ஏப்ரல் காலகட்டத்தில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருமானம் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வருவாயான 1,251.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது 10.2% அதிகமாகும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா வருமானம் 646.1 மில்லியன் அமெரிக்க டொலர் என்று இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
