திருகோணமலையில் தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் : மூவர் கைது
புதிய இணைப்பு
திருகோணமலை குச்சவெளி காவல் பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரதேசம் தெகிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா செய்ய இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60 , 40 வயது மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளதுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை 28 ஆம் திகதி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முன்னிலைப்படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீரபிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை (Trincomalee) புறா தீவிற்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்று, புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, படகு சவாரி மற்றும் நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்தநிலையில், உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திருப்பிக் கொடுக்கும் போது குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர்.
இருப்பினும், சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால் சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |