படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு!
திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின.
இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன. அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியிட்டிருந்தார்.
ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.