மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் இருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம் - திருகோணமலையில் சம்பவம்
இரண்டாம் இணைப்பு
திருகோணமலை உட்துறைமுகவீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் வானில் பயணித்த நோயாளியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவியும் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளான கவிசாலினி (வயது 9) படுகாயமடைந்துள்ளதுடன் மருமகளான எட்றிக் செரலினா (வயது 10) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு குறித்த வானில் அழைத்துவரப்பட்ட நோயாளியான தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை உட்துறைமுகவீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வான் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று (25) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் திருகோணமலை டைக் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரு சகோதரிகளும் காயமடைந்துள்ளனர்.
பலத்த காயங்களுக்குள்ளான கவிசாலினி (வயது 9), எட்றிக் செரலினா (வயது 6) என்ற இரு சகோதரிகளும் திருகோணமலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 9 வயதான மாணவி மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு தாயுடன் உட்துறைமுக வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள்மீது சீனக்குடாவில் இருந்து வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற வான் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சகோதரிகளும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, வானில் பயணித்த நோயாளி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த இரு சகோதரிகளும் புனித மரியாள் கல்லூரி மாணவிகள் எனவும் தெரியவருகின்றது.