பசுமை ஆற்றல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
திருகோணமலை பிரதேசத்தை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படும் பசுமை ஆற்றல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் இந்நாட்டில் வருமானம் ஈட்டும் ஆற்றல்மிக்க பிரதேசமாக இது அமையும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

அத்துடன், எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எரிபொருளுக்கு நிகரான பெறுமதிமிக்கதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இப்போது எண்ணெய் வைத்திருக்கும் நாடுகள் மிகவும் பணக்கார நாடுகளாக மாறிவிட்டன, எதிர்காலத்தில் எரிபொருள் தயாரிக்க காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் தேவைப்படும்.
இது எமக்கு போதுமான நாடு என்பதனால், இந்த திருகோணமலை பிரதேசம் அந்த நோக்கத்திற்காக பசுமை ஆற்றல் மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் வேலைத்திட்டத்தின் பிரகாரம், இந்த திருகோணமலை பிரதேசத்தையும், இந்தியாவையும் அந்த நிறுவனத்தையும் ஒன்றிணைத்து பசுமை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்தால், அடுத்த சில வருடங்களில் எண்ணெய் வளம் கொண்ட பிரதேசம் போன்று பாரிய வருமானப் பிரதேசமாக எதிர்காலத்தில் பிராந்தியங்கள் உருவாகும்” என்றார்.