ஹமாஸ் பக்கம் திரும்பியது துருக்கி! மேற்குலக நாடுகளுக்கு திடீர் அதிர்ச்சி
ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல மாறாக தமது மக்களையும் மண்ணையும் காக்க போராடும் ஒரு குழு என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்த கருத்து புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கான தனது பயணத்தை மீளெடுத்த நிலையில் எர்டோகன் இந்தக் கருத்தை தெரிவிதுள்ளார்.
நேட்டோவின் உறுப்பு நாடொன்றின் தலைவர் தெரிவித்த இந்தக் கருத்தால் மேற்குல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
மேற்குல நாடுகளுக்கு சங்கடம்
மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பார்த்தாலும், ஹமாஸ் ஒரு இராணுவப் பிரிவைக் கொண்ட ஒரு இஸ்லாமிய விடுதலை அமைப்பு என துருக்கி நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் குறிப்பிட்டுள்ளமை மேற்குல நாடுகளுக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என கருதும் ஹமாஸ் அதனிடம் இருந்து பாலஸ்தீனப் பகுதிகளை விடுவிக்க முயற்சிப்பதாகவும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
காசா மீதான தாக்குதல்
துருக்கிக்கு இஸ்ரேலுடன் எந்தப் பிரச்சனையும் இல்லையென சுட்டிக்காட்டிய எர்டோகன் இஸ்ரேல் செய்த அட்டூழியங்களை துருக்கி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது என்றும் கூறினார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் ஏறத்தாழ அரைவாசிப்பேர் குழந்தைகள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டிய எர்டோகன் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாதெனவும் கூறினார்.