அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு..! விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
சுற்றிவளைப்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக நாட்டில் துப்பாக்கிசூடு அதிகரித்து வரும் நிலையில் குறித்த வெளிநாட்டு துப்பாக்கிகள் எவ்வாறு இவர்களிடம் கிடைத்தது என்பன பற்றி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேலியகொட
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் பேலியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெலியகொட, ஹொரனை சந்தியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய நாகமுவ, ரணல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் சந்தேகநபரை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவிஸ்ஸாவெல்ல
அவிஸ்ஸாவெல்ல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு கலடுவாவ பிரதேசத்தில் சீதாவக்கபுர குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது மூன்று தோட்டாக்கள் உள்ளடங்களாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.