மர்மமான முறையில் உயிரிழந்த இரு முதியவர்கள்: மூன்று நாட்களாக சடலங்களுடன் வசித்த மகள்
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரு முதியவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவல்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேலனை செட்டிபுலம் பகுதியில் இவ்வாறு சடலங்களாக குறித்த முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த 74 வயதுடைய முதியவரும் மற்றும் அவரது அக்கா முறையான 73 வயதுடைய மூதாட்டியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் மூதாட்டி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் மூதாட்டியின் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 45 வயதுடைய மகளும் வசித்து வந்துள்ளார்.

உறவினர்களின் நெருக்கமான தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த குடும்பத்தினரின் வீட்டில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து அயலவர்கள் வீட்டின் வளாகத்திற்குச் சென்று பார்த்த போது இரு முதியவர்களும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டதுடன் வேறு இடங்களில் வசித்து வந்த உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, மூதாட்டியின் மகள், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தனது தாய் மற்றும் மாமாவுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹனிபா ரயீஸ், சடலங்களைப் பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இரு முதியவர்களின் உயிரிழப்பு தொடர்பிலும் ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



