பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை - ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு!
உக்ரைனுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திருப்பு முனை எதுவும் ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிடிரி பெஸ்கோ, “நேற்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகவும் திருப்பு முனையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் நம்மால் கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் உக்ரைனிய நகரங்களில் தாக்குதல் நடந்தாலும், போரை முடிவுக்கு கொண்டு வர மற்றொரு பக்கம் சமரச பேச்சு வார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில், இருந்ததாகவும் தலைநகர் கீவ் அருகே படைகளை குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
இதனிடயே, ரஷ்யா படைக்குறைப்பில் எதுவும் ஈடுபடவில்லை என்றும் தொடர்ந்து தாக்குதலையே நடத்தி வருவதாக உக்ரைனும், அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், இரண்டாவது மாதமாக நீடித்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்து வரும் மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்தப் போரினால் இதுவரை ஏறத்தாழ 40 இலட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
