இலங்கையின் உள்நாட்டு போரில் மக்களைக் காக்கத் தவறிய ஐ.நா : தனது தோல்வியை தானே ஒப்புக்கொண்டது மனித உரிமைகள் ஆணையம்
இலங்கையின் உள்நாட்டு போர் வரலாற்றில் மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அமைவான நடவடிக்கைகளை உறுதிசெய்வதில் ஐக்கிய நாடுகள் சபை தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்தல் ஆகிய விடயங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை தாமதப்படுத்தியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மதிப்பீடுகள்
இந்தத் தவறுகளைப் புதியதாகக் கூறாமல், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் உள்ளக மீளாய்வுக் குழு ஏற்கனவே கண்டறிந்திருந்த விடயங்களையே இந்த அறிக்கை மீள நினைவுபடுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரப்பில் இத்தகைய நிர்வாக மற்றும் செயற்பாட்டுத் தவறுகள் இடம்பெற்றிருந்தாலும், போரின் போது நிகழ்ந்த பாரதூரமான மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குற்றவியல் வழக்குகளைத் தொடர்வதற்கும் இலங்கை அரசுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பை இது எவ்வகையிலும் குறைக்காது என அறிக்கை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்றை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்நிலையும் ஆற்றலும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் இல்லை என 2006 ஆம் ஆண்டிற்கு முன்னரே ஐ.நா. மதிப்பீடுகள் எச்சரித்திருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் 11 ஆவது நிவாரணத் தொடரணி
மேலும், ஐ.நா. முகவர் அமைப்புகளையும் சர்வதேச நிறுவனங்களையும் வன்னியிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சர்வதேசப் பணியாளர்கள் வெளியேறினர்.

இது மனிதாபிமான உதவிகளைக் குறைத்ததுடன், நிலைமைகளைக் கண்காணிக்கும் சர்வதேசப் பிரசன்னத்தையும் இல்லாமற் செய்த ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்தது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் "11 ஆவது நிவாரணத் தொடரணி" (Convoy 11) மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையும், அதன் நடவடிக்கைகளுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமையும் இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ள நான்கு முக்கிய சம்பவங்களில் ஒன்றாகும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |