ஐ.நா - இலங்கை புதிய ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகமானது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்ற வகையில் செயற்படவுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து ஐ.நா முகவர் அமைப்புகளினதும் செயற்பாடுகளை வழிநடத்தும் வகையில் இந்த சட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலைபேறான அபிவிருத்தி இலக்காக கொண்ட சட்டகம்
நிலைபேறான அபிவிருத்தியை இலக்காக கொண்டு 2030 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நோக்கம் மற்றும் பங்களிப்பை இது ஒருங்கிணைக்கவுள்ளது.
இந்த கூட்டுறவு சட்டகமானது பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதனோடு இணைந்த கொரோனா பாதிப்புகள் என்பவற்றிலிருந்து வேகமாக மீளெழுச்சி பெறுவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தவுள்ளது.
அத்துடன் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒத்துழைப்பு, சமூக சேவைகள், நியாயமான தொழில், சமூக ஒருங்கிணைவு, மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளது.
பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்கு
ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகத்தின் ஒப்பந்ததில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் சார்பில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
அத்துடன் இலங்கையிலுள்ள ஐ.நா முகவர் அமைப்புகள் நிதியங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களின் தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கையொப்பமிடும் நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அவரோடு ஐ.நா அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லச்லன்-காரரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திறைசேரி செயலாளரான மஹிந்த சிறிவர்தன, ஐக்கிய நாடுகளின் இந்த கூட்டுறவு சட்டகமானது முக்கிய அங்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிட ஒருங்கினைப்பாளர் ஹனா சிங்கர் இந்த செயற்பாடுகள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொவிட் 19 பாதிப்பு என்பவற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைந்திருக்கும் என கூறினார்.
