ஐ.நா அறிக்கையை எரித்தது தவறு! கலக்கத்தில் சி.வீ.கே.சிவஞானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஆனால் அதனை எரித்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கட்சி ரீதியாக நாங்கள் எமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஏமாற்றம் ஏற்பட்டதையும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்.
சிறீதரனின் ஜெனிவா பயணம்
எங்களுடைய கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சிவஞானம் சிறீதரன் ஏற்கனவே ஜெனிவாவுக்கு போயிருக்கின்றார். அவர் தனிப்பட்ட ரீதியாக போயிருந்தாலும் எங்களுடைய கட்சியினுடைய உறுப்பினர்.
தனிப்பட்டதாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்ந்த நிலைப்பாடாகவும் அவரை நான் பார்க்கின்றேன். அவர் கூடுதலாக பக்க நிகழ்வுகளில் பங்கேற்பார் என நம்புகிறேன்.
ஐநாவின் அறிக்கைகளை ஏமாற்றம் என்றே சொல்கிறோம். எதிர்ப்பதாக சொல்லவில்லை. எதிர்க்கின்றோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் எவ்வாறு அவர்களிடம் செல்ல முடியும். எரிக்கிறோம் என்று சொன்னால் நாங்கள் அவர்களிடம் சொல்ல முடியாது.
ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் சந்திரிகாவின் அரசியல் தீர்வு வரைவை நாடாளுமன்றத்துக்குள் வைத்து எரித்தார்.
எங்கள் விடயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது சர்வதேசம் என சொன்னாலும் அதில் மிக முக்கியமான பங்கு இந்தியாவிற்கு உண்டு.
இந்தியாவுக்கு இருக்கும் சக்தி
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை செய்ததன் மூலமே அந்த பங்கு அவர்களுக்கு கிடைக்கிறது. பொதுவாக இந்திய தரப்பு சொல்வது, அண்மையில் இந்திய தூதர் கூட சொல்லி இருந்தார். நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று. அதை நாங்கள் செய்வோம்.
13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறை செய்வது வேண்டுமென்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். விசுவாமித்திரர் வரம் கொடுத்தது போல நாம் கேட்க தேவையில்லை. சைக்கிள் கட்சி மாத்திரமே உடன்படவில்லை. ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக தான் இருக்கிறார்கள்.
இந்தியா எங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோருகிறோம்.
ஆனால் தற்போது இருக்கிற அரசியலமைப்பில் இருக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறை செய்ய வேண்டும் என்பதை சைக்கிள் கட்சியை தவிர நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். சைக்கிள் வராது என தெரிந்து கொண்டு ஒற்றுமை என கதைக்க முடியாது.
ஆகவே இதை மாற்றம் செய்யக் கூடிய சக்தி இந்தியாவுக்கு தான் இருக்கிறது அதை நாம் நம்புகிறோம் இந்தியா செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
