வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் கோர சம்பவம்!
இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இரவோடு இரவாக சிங்கள அரசால் தகர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டொக்டர் எஸ். ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நினைவுத்தூபி அமைப்பதைக் கூட அனுமதிக்காக ஆட்சியில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ முடியும்? என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டதை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈழத்தமிழர் விவகாரத்தை கைகழுவி விடாமல், அவர்களுக்கு வாழ்வுரிமையை வென்றெடுத்துக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதோடு இது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ரி.ரி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்



