ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு - 2024 ஆம் ஆண்டு நடைமுறையாகுமென அறிவிப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் குறித்த யாப்பின் நடைமுறைக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு
கட்சியின் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அண்மை நாட்களில் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவளித்திருந்த நிலையில், சிலர் அதனை எதிர்த்திருந்தனர்.
இந்த பின்னணியில், கட்சியின் புதிய யாப்பு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் அனைவருக்கும் அதிபர்
இதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், ஏனைய அரசியல் கட்சிகள் தம்மை எதிரியாக பார்த்தாலும் தாம் சிறிலங்காவின் அதிபர் என அவர் கூறியுள்ளார்.
கட்சி பாகுபாடுகளை தாம் பொருட்படுத்தவில்லை எனவும் சிறிலங்காவின் அதிபராக எதிர்வரும் நாட்களில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாதெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச எதிர்ப்பு போராட்டங்கள்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கடந்த ஆண்டு நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை தற்போதைய சிறிலங்கா அதிபர் நினைவூட்டியுள்ளார்.
கோட்டபய ராஜபக்சவின் பதவி விலகளை தொடர்ந்து, தாம் ஜனாதிபதியாக பதவியேற்றமை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் ராஜபக்சக்களை காப்பற்றுவதற்காக பதவியேற்கவில்லை எனவும், இலங்கையின் நிலையை மேம்பட செய்வதற்காக பதவியேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய சட்டமூலம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டமூலத்தக்கு ஒப்பான சட்டமொன்றை தற்போது முன்னாள் சபநாயகர் கரு ஜயசூரிய தயாரிப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் தொடர்பில் அண்மை நாட்களில் வெளிவரும் செய்திகளையும் விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.