அடையாள தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள்!
அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் நாளை (30.12.2025) ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இத்தீர்மானம் நேற்று (28.12.2025) நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
சட்டத்திருத்தம்
அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்தம் தேவையானதுதான் என்றாலும், அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

அவற்றை திருத்துவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக, கல்வி அமைச்சரும் பிரதமரும் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய சட்டம் அமுலுக்கு வரும் வரை தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படியே பீடாதிபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் சங்கங்கள்
ஆனால், இதற்கு முரணாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், பீடாதிபதிகளையும் திணைக்களத் தலைவர்களையும் நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இது சட்டரீதியாக முற்றிலும் தவறானது என ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கோரிக்கைகளை அமுல்படுத்துவதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடர்ந்து அசமந்தப்போக்கை பேணி வருவதாகவும், அதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமெனவும் இந்த ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உப தலைவர் எம். ஏ. எம். சமீம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பீடாதிபதி மற்றும் திணைக்களத் தலைவர் நியமனம் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை உடனடியாக திரும்பப் பெறாவிடில், தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |