கைதுசெய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட மூவர்! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடாத்த ரணில் அனுமதி
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்
அனுமதி வழங்கியுள்ளார்.
காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 18 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம்
ஓகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க உட்பட 19 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களில் 16 பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
எனினும், வண. கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்படவில்லை, மாறாக 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.