தேசிய அரசாங்கத்தை அமைக்க ரணில் தரப்பு மும்முரம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்தை மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது.
இதனால் ஏனைய கட்சிகளுடன் பரந்த அடிப்படையிலான பேச்சுவார்த்தையை நடத்த நாம் தயாராக உள்ளோம்.
நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் கவனம் செலுத்தும். இது குறித்து ஏனைய கட்சிகளினதும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும், ஏனெனில் ஆளும் தரப்பினர் தமது பங்காளிக் கட்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.
