3 சிறைச்சாலைகளில் தொடர் வன்முறைகள்: முக்கிய புள்ளியின் உயிருக்கு ஆபத்து
மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
மெகசின் சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்
அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இக்கடிதத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 18, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி கவலை தெரிவித்துள்ளது.
மேலும், சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அவசரச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பதவியில் இருந்த காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழே அகில விராஜ் காரியவாசம் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |