ஈரானின் சக்திவாய்ந்த மறைந்த இராணுவத்தளபதியின் மருமகள் மற்றும் பேத்தி அமெரிக்காவில் கைது
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மறைந்த தளபதி ஜெனரல் காசெம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஹமிதே சுலைமானி அஃப்ஷார் மற்றும் அவரது மகளின் சட்டபூர்வ அமெரிக்க நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவால் ரத்து செய்யப்பட்டதாக இன்று(04)சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுச் செயலரின் பதிவு
சமூக ஊடகத்தில் இட்ட ஒரு பதிவில், அந்த இரு பெண்களும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் வரை, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) காவலில் இருப்பதாக ரூபியோ கூறினார்.

ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சுலைமானி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் முதலாவது பதவிக்காலத்தின்போது ஈராக்கில் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 2020-ல் கொல்லப்பட்டார்.
சுலைமானி அஃப்ஷார் "ஈரானில் உள்ள சர்வாதிகார, பயங்கரவாத ஆட்சியின் வெளிப்படையான ஆதரவாளர்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.சுலைமானி அஃப்ஷார் தனது சமூக ஊடக கணக்கில் "ஈரானிய ஆட்சியின் பிரச்சாரத்தை" ஊக்குவித்ததாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பாக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்
சுலைமானி அஃப்ஷரின் கணவருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை, சுலைமானி அஃப்ஷரின் மகள் அல்லது கணவரின் பெயர்களை வெளியிடவில்லை.

ரூபியோவும் X தளத்தில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார், அதில் சுலைமானி அஃப்ஷரும் அவரது மகளும் "கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
ஜெனரல் காசெம் சுலைமானி, ஈரானின் உயர்மட்ட குட்ஸ் படையின் தலைவராக, மத்திய கிழக்கில் ஈரானிய இராணுவ நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினார். 62 வயதான அவர், ஈரான் ஆதரவு பெற்ற மற்ற போராளிகளுடன் பாக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார்.
நினைவு கூர்ந்த ட்ரம்ப்
புதன்கிழமை தனது நாட்டு மக்களுக்கான உரையின் போது, ஜனாதிபதி ட்ரம்ப், அந்தத் தளபதி மீது தான் உத்தரவிட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு, சுலைமானி பற்றிப் பேசினார்.

"எனது முதல் பதவிக்காலத்தில் ஜெனரல் காசெம் சுலைமானியைக் கொன்றேன். அவர் ஒரு தீய மேதை, புத்திசாலி, ஆனால் ஒரு கொடூரமான மனிதர். சாலையோர வெடிகுண்டுகளின் தந்தை, அவர் வாழ்ந்த விதம் மிகவும் கொடூரமானது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
சுலைமானி இன்னும் உயிரோடு இருந்திருந்தால், போரில் ஈரான் ஒருவேளை மிகவும் சிறந்த, வலிமையான நிலையில் இருந்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 12 மணி நேரம் முன்